தலையங்கம்
நீரின்றி
அமையாது உலகு
இயற்கை என்பது உயிர்களுக்குக் கிடைத்த பெரும்பேறு. உயர்ந்தோங்கிய மலைகள், காடுகள், பசுமைப் புல்வெளிகள், நீர்நிலைகள், வயல்வெளிகள், பசுமையான தோப்புகள் என
இயற்கையின் கொடைகள் கணக்கிலடங்காதவை. அவற்றை உரிய வகையில் பயன்படுத்தியும் பாதுகாத்தும் அடுத்த தலைமுறையினருக்கு அளிப்பது நமது பொறுப்பு. எனவே, நீர் மேலாண்மையின் தேவையை உணர்ந்தே ஆகவேண்டிய காலகட்டம் இது.நீர்இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
என்கிறார்
திருவள்ளுவர். இந்த பூமியின் ஆதாரமே நீர் தான். தண்ணீர் இல்லாமல் இந்த
உலகத்தில் எந்த தொழிற்பாடுகளும் நடைபெறமாட்டாது. இந்த பூமியில் பச்சை புற்கள் கூட
தண்ணீர் இல்லாவிட்டால் முளைக்காது. பூமியிலே உள்ள எல்லா உயிரினங்களும் நீரை
நம்பியே வாழ்கின்றன. தண்ணீர் இல்லாத பாலை நிலத்தில் வாழ்க்கை எவ்வாறிருக்கும்?
என்பதை சிந்தித்து பார்த்தால் தண்ணீரின் அருமை புரிந்துவிடும்
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5 ஆம் நாள் உலகச்
சுற்றுச்சூழல் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இயற்கை வழங்கிய தண்ணீரின் இன்றியமையாமை
குறித்து எல்லோரும் சிந்திக்க வேண்டும். மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை,
உறைவிடம். இவற்றுள் முதலிரண்டும் வேளாண்மையை ஆதாரமாக கொண்டவை.
வேளாண்மையோ நீரை அடிப்படையாகக் கொண்டது.
மழைநீர், ஆற்றுநீர், ஊற்றுநீர் ஆகியவற்றைச் சிறிய, பெரிய நீர்நிலைகளில்
சேகரிக்க வேண்டும். அதனை வேளாண்மைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதை நம்
முன்னோர்கள் திட்டமிட்டுச் செய்தனர். ஒவ்வொரு வட்டாரத்தின் நில அமைப்பு, மண்வளம், மக்கள்தொகை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே
நீர்நிலைகளை வடிவமைத்தனர். இதில் ஏரிகளும் குளங்களும் பாசனத்திற்கான
அமைப்புகளாய்ப் பெருமளவில் பயன்பட்டன.
தமிழக வரலாற்றில் பல நூற்றாண்டுகளுக்கு முன்
கரிகால்சோழன் காலத்தில் கட்டப்பட்ட கல்லணையே விரிவான பாசனத்திட்டமாக இருந்துள்ளது.
கல்லணையின் நீளம் 1080 அடியாகவும் அகலம் 40 முதல் 60
அடியாகவும் உயரம் 15 முதல் 18
அடியாகவும் இருக்கிறது. அது வலுவான கட்டுமானத் தொழில்நுட்பத்தால் இன்றும்
பயன்படுவதோடு நமது வரலாற்றுப் பெருமைக்கும் சான்றாக நிலைத்து நிற்கிறது.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்
ஒவ்வோர் ஆண்டும் பெய்கின்ற மழையின் அளவு கூடுதலாகவோ
குறைவாகவோ இருக்கலாம். ஆனால், மழை வழங்கிய நீரை இத்தகைய நீர்நிலைகளே
பாதுகாத்துத் தருகின்றன. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் மகிழ்ச்சியாக
வாழப் பெருந்துணை புரிகின்றது. மழை உழவுக்கு உதவுகிறது. விதைத்த விதை ஆயிரமாகப்
பெருகுகிறது. நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில்
வளர்கின்றன என்று மாங்குடி மருதனார் கூறியதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்தோங்கிய இன்றைய வாழ்வில் தண்ணீரின் நிலை குறித்து ஆய்வுசெய்ய வேண்டியது இன்றியமையாததாகும். உலகம் முழுவதும்
தண்ணீர்ப் பஞ்சம் உருவாகத் தொடங்கிவிட்டது. அமெரிக்கா, இந்தியா
பாகிஸ்தான் சீனா ஆகிய நாடுகளில் நிலத்தடி நீர்வளம் குறைந்து வருகின்றது. குறிப்பாக
நமது நாட்டில் இராஜஸ்தான் மாநிலத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பே 700 அடிவரை ஆழ்குழாய்கள் இறக்கியும் நீர் கிட்டவில்லை. சிறுநகரங்களிலும்கூட
நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. கோடைக் காலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை
மக்களுக்குப் பெரும் வாழ்வியல் நெருக்கடியாக மாறியுள்ளது.
உலகச் சுகாதார நிறுவனம். உலகம் விரைவில் குடிநீருக்கான
கடும் சிக்கலை எதிர்கொள்ளும் என எச்சரிக்கிறது.குடிநீரை விலைகொடுத்து வாங்கும்
அவலம் தொடரும் நிலையை மாற்றியமைக்கத் திட்டமிட வேண்டியது உடனடித் தேவையாகும்.
ஆண்டுதோறும் பெய்கின்ற மழைப்பொழிவை ஆக்கநிலையில் பயன்படுத்தும் செயல் திட்டத்தை
நாம் உருவாக்க வேண்டும்.
அறிவியல் அணுகுமுறையில் மழைநீரைத் தேக்கி வைத்துப்
பாசனத்திற்குப் பயன்படுத்த ஊர்தோறும் ஏரிகளை உருவாக்கினர் நம் முன்னோர். அவற்றைத்
தூர்வாரி முறையாகப் பராமரிப்புப் பணிகளைச் செய்தல் வேண்டும். இதை ஒரு மக்கள்
இயக்கமாக,
மழைக்காலத்திற்கு முன்பே செய்ய வேண்டும்.கடமை.
உலகின் பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கு அடிப்படைத் தேவையாக
உள்ள தண்ணீரைப் பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டும். நமது முன்னோர்கள் கண்டுணர்ந்த
மரபார்ந்த அணுகுமுறைகளைப் பின்பற்றவேண்டும். குளம், ஏரி, கால்வாய். கிணறு போன்ற நீர்நிலைகளின் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வை
மக்களிடம் உருவாக்குதல் வேண்டும்.
பணம் கொடுத்தால் உணவை விலைக்கு வாங்கிவிடலாம் என்னும்
மேலோட்டமான கருத்தோட்டத்தை மாற்றிக் கொள்வோம். உணவு உற்பத்திக்கு அடிப்படை நீரே.
அதுமட்டுமன்றி நீரே உணவாகவும் இருக்கிறது என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம்
மழை
என்று
திருவள்ளுவர் கூறியுள்ளதைக் கருத்தில்கொண்டு செயல்படுவோம். அடுத்த உலகப்போர் ஒன்று உருவானால்,
அது தண்ணீருக்கத்தான் உருவாகும் என்னும் நிலைமைக்கு முடிவுரை எழுதுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக