செவ்வாய், 22 நவம்பர், 2022

பெண் விடுதலை - கட்டுரை

 பெண் விடுதலை

முன்னுரை

பெண் என்ற தாய்மையில் தான் உலகில் அனைத்து உயிர்களும் தோன்றுகின்றன. பெண்கள் நாட்டின் கண்கள் என்ற வாசகத்திற்கு ஏற்ப நாட்டின் வளர்ச்சிக்கு அறிவியலும் பொருளாதாரமும் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு ஒரு நல்ல சமுதாயம் உருவாவதற்கும் உயர்வதற்கும் பெண்களின் பங்கு இன்றியமையாதது.

ஒரு பெண் சமூகத்தில் தன் பெற்றோருக்கு நல்ல மகளாகவும், உடன் பிறந்தவர்களுக்கு சகோதரியாகவும், கணவனுக்கு மனைவியாகவும், குழந்தைக்கு நல்ல தாயாகவும் விளங்குகிறாள். ஒரு ஆணிற்கு கிடைக்கும் கல்வி அவன் ஒருவனுக்கு மட்டுமே பயன்படும் ஆனால் ஒரு பெண் பெரும் கல்வி அவளுக்கு மட்டும் இன்றி அவளை சுற்றி உள்ளவர்களுக்கும் அவளின் சந்ததியினருக்கும் குடும்பத்தையும் போய்ச் சேரும் என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.

சங்ககாலப் பெண்கள்

பெண்கள் சங்ககாலத்தில் சிறப்புற்று இருந்தார்கள். கல்வி கற்ற பெண்கள், அரசர்களுக்கு நல்ல அறிவுரைகளை எடுத்துக் கூறியுள்ளனர். அவ்வையார், வென்னிக் குயத்தியார், காவற்பெண்டு, நப்பசலையார், பொன்முடியார் போன்ற பெண்பால் புலவர்களை இதற்குச் சான்றாகக் கூறலாம். பக்தி இயக்கக் காலத்திலும் ஆண்டாள், காரைக்காலம்மையார் போன்ற பெண்கள் இறைவனுக்குப் பாமாலை சூடியுள்ளனர்.

இடைக்காலப் பெண்கள்

பெண்களின் வளர்ச்சியைப் பற்றி அறியாத சில மூடர்கள் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?’, ‘பெண் புத்தி பின் புத்தி என்றெல்லாம் கூறி பெண்களை அடிமைப்படித்தினர். பெண்களுக்கு கல்வி உரிமையைத் தர மறுத்தனர். அவர்களை தங்களுக்குக் கீழ் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர் ஆண்கள். பெண்களை இந்த நிலையிலிருந்து மாற்ற பல சமூக சீர்த்திருத்தவாதிகள் போராடினார்கள்.

ஆங்கிலேயர் காலத்தில் சமூகச்சீர்திருத்த சிந்தனையாளர்கள் ராஜராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி, பெரியார் முதலியோர் தோன்றி பெண்களின் நிலையை மாற்றினார்கள். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக பட்டங்கள் ஆள்வதும்  சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என பாரதியார் பாடினார்.

தற்காலப் பெண்கள்

பெண்கள் கல்வி பெற்றதால் இன்றைய உலகில் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் கால்தடம் பதித்துள்ளனர். விளையாட்டுத்துறையில் பி வி சிந்து, விண்வெளி ஆராய்ச்சி துறையில் கல்பனா சாவ்லா போன்றவர்கள் உள்ளனர். ஜான்சி ராணி, இந்திரா காந்தி, ஜெயலலிதா போன்ற பெண் தலைவர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்து வந்துள்ளனர்.

 ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். முன்பெல்லாம் ஆண்கள் மட்டுமே வருவாய் ஈட்டி வந்து கொண்டிருந்தனர் இப்பொழுது பெண்களுக்கு கல்வியறிவு கிட்டியதால் பெண்களும் ஆண்களுக்கு சமமாக வருமானம் ஈட்டுகின்றனர். இதனால் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெற்று உள்ளது.

முடிவுரை

வளர்ந்த நாடுகள் பல பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தேவைகள் சுதந்திரம் பாதுகாப்பு என பெண்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். நாடு மற்றும் வீட்டின் முன்னேற்றத்திற்கும் பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும். பெண்களை தெய்வமாக வழிபடும் நாம் கல்வியறிவு பெறவும் செய்வோம். பெண்கள் இந்த சமுதாயத்தில் விதைகள். விதைகள் நன்றாக இருந்தால் செடியாக வளர்ந்து கனிகளைத் தரும்.  வீட்டை அழகாகும் பெண்களுக்கு, உலகை அழகாக்க பெண் விடுதலையை ஆதரிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக