செவ்வாய், 22 நவம்பர், 2022

கல்வியின் சிறப்புகள் - பேச்சுப்போட்டி

கல்வியின் சிறப்பு

'கண்ணுடையர் என்போர் கற்றோர்' என்கிறார் திருவள்ளுவர். அதாவது கல்வி கற்றவர்களே கண் உடையவர்கள். மற்றவர்கள் முகத்தில் இரண்டு புண்களை உடையவர்கள் எனக் கூறி கல்வியின் சிறப்பை எடுத்துரைக்கிறார்.

கல்வி கற்றால்தான் சிறப்பாக வாழலாம் என்கிற நிலைமை இன்று வந்துவிட்டது. 'இளமையில் கல்' என்று அன்றே நமது சான்றோர்கள் கூறியுள்ளார்கள். கல்வி கற்பது சம்பாதிக்கத்தான் என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறான ஒரு கருத்து ஆகும். இன்று நாம் இந்த சமுதாயத்தில் சிறப்புடன் வாழ கல்வி அவசியமான ஒன்றாகும். நாம் அறிவுத் தெளிவு பெறவும், நமது குடும்பத்தைச் சிறப்புற நடத்தவும் இன்று கல்வி நமக்கு அவசியம் ஆகும்.

கல்வி காலத்திற்குக் காலம் மாறும். பண்டைய காலத்தில் போர்க் கல்வியே சிறந்த கல்வியாகக் கற்பிக்கப்பட்டது. இடைக்காலத்தில் நம் நாட்டில் தத்துவக் கல்வியே பிறப்புப் பாடமாகப் போதிக்கப்பட்டது. ஆனால் இன்று காலத்தின் நடைமுறைக்கு ஏற்ப. எதிர் காலத்தின் தன்மை கருதி, 'கம்ப்யூட்டர்' கல்வி கற்பிக்கப்படுகிறது. கல்வியின் சிறப்பைக் கருதிதான் இன்று 'அனைவருக்கும் கல்வி' என்கிற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். நமது இந்திய அரசியல் சட்டப்படி, நமது நாட்டில் உள்ள அனைவரும் கல்வி கற்க உரிமை பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில்தான் பதினான்கு வயது வரை அனைவருக்கும் கட்டாய், இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற திட்டத்தை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள்.

கல்வி கற்பது உங்கள் வாழ்வை உயர்த்திச் செல்லும் ஓர் அற்புதப் பொக்கிஷம் ஆகும். நீங்கள் கற்கும் கல்வி உங்களை மட்டும் வழிநடத்துவதோடு அன்றி, உங்கள் குடும்பத்தையே வழி நடத்திச் செல்லும் 'கலங்கரை விளக்கு' ஆகும்.

'கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு' என்பதற்கேற்ப கல்வியை சிறப்பாகக் கற்பதால் உள்நாட்டில் மட்டும் அல்லாது வெளி நாட்டிலும் பணியாற்றி அதிக அளவில் வருமானம் தேட வழி உள்ளது. கல்வி சிறந்த முறையில் கற்பதால் சமுதாயத்தில் உங்களுக்கு உயர்ந்த அந்தஸ்த்தையும். கௌரவத்தையும் கொடுக்கிறது. சாதி, மத பேதத்தைப் போக்கி, ஏழை, பணக்காரன் என்ற உயர்வு, தாழ்வை நீக்கி எல்லா வகையிலும் உங்களை சிறப்படையச் செய்வது கல்வி மட்டுமே ஆகும்.

எனவே, கல்வியின் சிறப்பை இன்று உலகமே நன்கு உணர்ந்துள்ளது. அதனை நாமும் உணர்ந்து, கல்வியில் சிறந்து நமது நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்ப்போம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக