அறிவைத் திறக்கும் நூலகம் - கட்டுரை

அறிவைத் திறக்கும் நூலகம்

          

குறிப்புச் சட்டகம்

                   முன்னுரை

                   நூலகம்

                    நூலகத்தின் தோற்றம்

                    நூலகத்தின் பல்வேறு பெயர்கள்

                    நூலக வகைகள்

                    நூலகத்தில் படிக்கும் முறை

                    பள்ளி நூலகம்

                    நூலகத்தின் பயன்கள்

                    முடிவுரை

முன்னுரை

வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும் - அறிஞர் அண்ணா.

'கண்டதைப் படிப்பவன் பண்டிதன் ஆவான்' என்பது பழமொழி. எதுவும் தெரியாமல் பிறந்த நாம் அறிஞனாக நூலகப் படிப்பு அவசியம். நமக்குப் பல்வேறு புத்தகங்கள் தாங்கிய நூலகம் காத்திருக்கின்றது. அதனை நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். நூலகத்தைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நூலகம்

”நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்பார் ஆபிரகாம் லிங்கன். 

மனிதனை விலங்கிடமிருந்து வேறுபடுத்துவது சிரிப்பு மட்டுமன்று. சிந்திப்பதும்தான். சிந்தனயைத் தூண்டுவது கற்றல் மட்டுமன்று, நூல்களும்தான். உலகமெங்கும் பயணம் செல்லும் பட்டறிவை நூலுலகம் தருகிறது. நல்ல நண்பனைப் போன்ற நூலையும், நல்ல நூலைப் போன்ற நண்பனையும் தேடிப் பெற வேண்டும். இசையைப் போன்றே இதயத்தைப் பண்படுத்துவன நூல்களே. அத்தகைய நூல்களின் புகலிடம்தான நூலகம்.

உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே என்கிறார் கதே.

நூலகத்தின் தோற்றம்

ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன்  என்றார் மகாத்மா காந்தியடிகள்.

பண்டைக்காலத்தில் கல்வியறிவு பெற்றோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அரண்மனைகளிலும் கோவில்களிலும் படிக்கும் நோக்கமின்றி பெருமைக்காக மட்டுமே நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பிற்காலத்தில் நூல்கள் படிப்பதற்கே என்ற எண்ணம் தோன்றி நூலகங்கள் உருப்பெற்றன. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது, திருவனந்தபுரம் நடுவண் நூலகம் ஆகும்.

எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றவோ அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் என்றார் சேகுவாரா.

நூலகத்தின் பல்வேறு பெயர்கள்

புத்தகச்சாலை, ஏடகம், சுவடியகம், சுவடிச்சாலை, வாசகசாலை, படிப்பகம், நூல்நிலையம், பண்டாரம் என நூலகம் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது. 

நூலக வகைகள் 

அரசு பொது நூலகங்கள், சிறுவர்க்குரிய நூலகங்கள், தனியார் வணிக முறை நூலகங்கள், நடமாடும் நூலகங்கள் என நூலகங்கள் பிரிக்கப்படுகின்றன. நூலகத்தில் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கல்வி, பொருளியல், மருத்துவம், வரலாறு, ஆன்மிகம், உளவியல், பொறியியல் போன்ற துறை சார்ந்த நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். மேலும், நாளேடுகள், பருவ இதழ்கள் போன்றவைகளையும் படிக்கலாம். 

நூலகத்தில் படிக்கும் முறை 

நூலகத்தில் சத்தம் போட்டுப் படிக்கக் கூடாது. கருத்துக்களைக் குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக் கொள்ளலாம். நூல்களில் எவ்வித குறிப்புகளையும் எழுதுதல் கூடாது. நூலகரிடம் அனுமதி பெற்று விருப்பமான நூல்களை தேடியெடுத்து படித்து முடித்த பின் பொறுப்பாக ஒப்படைத்தல் வேண்டும். நூலக நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுதல் வேண்டும். 

பள்ளி நூலகம்

பள்ளி என்பது பாடநூல்களைக் கொண்டு அறிவை விதைக்கும் களம். நூலகமோ அந்த அறிவை செம்மைப்படுத்தும் மற்றொரு களமாகும். பள்ளியும் நூலகமும் இணைபிரியாதவை. அதனால்தான் அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி நூலகம் இடம் பெற்றுள்ளது. நம் பள்ளிக் கல்வித் துறையும் 'புத்தகப் பூங்கொத்து' என்னும் வகுப்பறை நூலகத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 

நூலகத்தின் பயன்கள்

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங்.

பாட அறிவோடு பின்தங்கிவிடாமல் உலக அறிவை வளர்த்துக் கொள்ளலாம். பல்வேறு துறை சார்ந்த தகவல்களை நூல்கள் மூலம் எளிதில் பெற்றுவிடலாம். பல்வேறு நூல்களைப் படித்துப் படைப்பாளராகவோ, பேச்சாளராகவோ மாறித் தனித்திறன்களை மெருகேற்றிக் கொள்ளலாம். ஓய்வு நேரத்தைப் பயனுள்ள முறையில் கழித்திடலாம். 

முடிவுரை 

ஒரு நூலகம் திறக்கம்படும்

ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும் - விவேகானந்தர்.

பேரறிஞர் அண்ணா கூறியது போல வீட்டிற்கு ஒரு புத்தகச்சாலை அமைத்திடுதல் வேண்டும். அறியாமை என்னும் இருள் அகல நூலகங்களை நாம் தவறாமல் பயன்படுத்துதல் வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்